நீண்ட காலமாக சட்ட விரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் கழிவு தூள்களை ஏற்றி வந்த சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை திம்புள்ள பத்தனை பொலிஸார் கொட்டகலையில் வைத்து இன்று (24) மதியம் கைது செய்துள்ளனர்.
கொட்டகலை நகர மைதானத்திற்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் கழிவு தேயிலையை லொறி ஒன்றிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கும் பொழுது திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு இவர்களை கைது செய்திருந்தனர்.
குறித்த இடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலைகளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை, இந்த இடத்திலிருந்து 2000 கிலோ கழிவு தேயிலை தூளுடன் வாகனமும், வாகன சாரதியும் கைது செய்யப்பட்டதுடன் இந்த கலப்பிட நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள உரிமையாளரையும் திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த உரிமையாளர் கம்பளை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இருவரையும், லொறியையும் நாளை (25) அட்டன் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.



